பவானியில் 5.6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது; கணவன், மனைவி தலைமறைவு..!
ஈரோடு மாவட்டம் பவானியில் 5.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரு வாலிபர்களை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய கணவன் - மனைவி இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
கைது செய்யப்பட்ட விவேக் (எ) வெள்ளையன், குமரகுரு (எ) அமுல்.
பவானியில் 5.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரு வாலிபர்களை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய கணவன் - மனைவி இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானியை அருகே செங்காடு முட்கள் நிறைந்த புதர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பவானி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பவானி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பகவதியம்மாள் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இரு வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணையில் நடத்தியதில் அவர்கள் பெயர், முகவரியை மாற்றி மாற்றி தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து , போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் விவேக் (எ) வெள்ளையன் (வயது 22), பவானி வர்ணபுரம் 5-வது வீதியைச் சேர்ந்த சரவணகுமார் மகன் குமரகுரு (எ) அமுல் (வயது 20) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, இவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, இவர்கள் அளித்த தகவலின் பெயரில் போலீசார் ஊராட்சிக்கோட்டை, காவேரி வீதி, காமராஜ் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அங்கு, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.600 கிலோ கஞ்சா, 5.700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த பவானி சேர்ந்த விஜயகுமார் (எ) விஜயன், இவரது மனைவி பவித்ரா (எ) மகேஸ்வரி ஆகியோர் போலீசார் தேடி வருகின்றனர்.