காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் முன்னேற்பாடு பணி: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
Erode News- ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Erode News, Erode News Today- ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான பவானி, அம்மாபேட்டை மற்றும் சிங்கம்பேட்டை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தென்மேற்கு பருவமழையினால் மேட்டூர் அணையின் 107.690 கனஅடியை எட்டியுள்ளதையடுத்து, அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறானது 84 கி.மீ தூரத்திற்கு உள்ளது.
இதில் அந்தியூர், பவானி, ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சுமார் 24 வருவாய் கிராமங்களும், பவானி நகராட்சியும் அடங்கியுள்ளது. அதனடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய பகுதிகள் கண்டறியப்பட்டு, இப்பகுதியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேவைப்படும் பகுதிகளில் முகாம்கள் அமைத்து, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக முக்கிய அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
வருகின்ற ஆடிப்பெருக்கு விழாவில் பவானி, கொடுமுடி உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு அதிகளவில் வருகை தரும் பக்தர்கள் நீர்நிலைகளில் நீராடுவார்கள். எனவே, இந்துசமய அறநிலைத்துறை மூலம் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் நீர்வரத்து அதிகபடியாக உள்ளதால், ஆற்றில் இறங்குதையோ, குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பவானி கூடுதுறை பாலம், பழைய பாலம் (பாலக்கரை), கந்தன்பட்டறை ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பசுவேஸ்வர் வீதி, நகராட்சி ஆரம்ப பள்ளியில் தயார் நிலையில் உள்ள முகாமினை பார்வையிட்டு, அங்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியில் காவிரி ஆற்றங்கரையோரம், சிங்கம்பேட்டை, படவல்கால்வாய் ஊராட்சி, பெரியகாட்டூர் பகுதி ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், பவானி வட்டாட்சியர் தியாகராஜன், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, பவானி துணை வட்டாட்சியர் பழனிவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.