பவானி நகராட்சியில் கள ஆய்வு மேற்கொண்ட ஈரோடு ஆட்சியர்

Erode news- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2024-09-19 11:45 GMT

Erode news- பவானி நகராட்சி மார்கெட்வீதியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் காலை உணவு சமைக்கும் இடத்தில் சமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த உணவினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

Erode news, Erode news today- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பவானி நகராட்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம்  பவானி வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராம நிர்வாக அலுவலகம், நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (18ம் தேதி) புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று (19ம் தேதி) வியாழக்கிழமை பவானி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் வீதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், உணவு சமைத்து எடுத்து செல்லும் இடத்தில், தயாராக இருந்த காலை உணவினை சுவைத்து பார்த்து, ஆய்வு மேற்கொண்டார்

தொடர்ந்து, பவானி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் பயணியர் பயன்படுத்தும் கழிவறை ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், பவானி நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றம் செய்து விநியோகம் செய்ய ஏதுவாக மின்னணு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் தானியங்கி நீர்மேலாண்மை கருவி பொருத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, செலம்பகவுண்டன்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பவானி அரசு மருத்துவமனை, மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மருந்துகள் இருப்பு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விபரம் குறித்தும் கேட்டறிந்தார்.


இந்த ஆய்வுகளின்போது, இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அம்பிகா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், பவானி நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ் (சத்துணவு), செல்வராஜ் (வளர்ச்சி), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரியா, பவானி வட்டாட்சியர் சித்ரா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News