அந்தியூரில் 10ஆம் வகுப்பு முடித்த மாணவி மாயம்: போலீசார் விசாரணை
குச்சலூரில் 10ம் வகுப்பு முடித்த மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
அந்தியூர், குச்சலூர் மாயவன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரது மகள் பிரேமா (17). பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பிரேமாவும், அவர் குடும்பத்தாரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டனர். அதிகாலை 3 மணி அளவில் பிரேமாவின் தாய் எழுந்து பார்த்தபோது மகள் பிரேமா மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரேமாவை தேடி வருகின்றனர்.