ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.

Update: 2021-10-16 04:30 GMT

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளி சிகிச்சை பிரிவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 51). இவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளி சிகிச்சை பிரிவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் பிரகாஷ் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பிரகாஷ் அங்கு உள்ள கழிவறைக்கு சென்றார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்து கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அதே பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நோயாளி கழிவறைக்கு சென்றபோது பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை தலைமை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News