கருணாநிதியின் குருகுலமாக விளங்கும் ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அண்ணா முதல்வராக பொறுப்பேற்றபோது, சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று உத்தரவிட்டதுதான் முக்கிய காரணம்;
கருணாநிதியின் குருகுலமாக விளங்கும் ஈரோட்டில் அவருக்கு மூன்று இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இது பெரியார் மண் என்பதால் 300 சிலைகள் கூட விரைவில் வைக்கலாம் என்றார் முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார் இல்ல திருமண வரவேற்பு விழா வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திப் பேசியதாவது:
நாளை நடக்கவுள்ள பிரதமர் பங்கேற்கும் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டியிருப்பதால், இன்றைய தினமே, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். திமுக இளைஞரணி வள்ர்ச்சிக்காக நான் சுற்றுப்பயணம் செய்தபோது, ஈரோடு அமைப்பாளராக இருந்த எவரெஸ்ட் கணேசன், நான் கொங்கு மாவட்டங்களுக்கு வரும் போதெல்லாம் என்னை வரவேற்று, எனக்கு துணையாக இருந்தவர். அவரது தம்பிகளில் ஒருவராக செயல்பட்ட செந்தில்குமார், முரண்டு பிடிக்கும் சுபாவம் கொண்டவர்.
விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தான் நினைத்ததைச் செய்ய வேண்டும் என நினைப்பவர். இந்த நிகழ்ச்ச்சிக்கு ஒப்புக்காகத்தான் என்னிடம் தேதி கேட்டார். அவர் கட்டாயப்படுத்தாவிட்டாலும், மழை, எனது உடல்நிலை பாதிப்பு குறித்து கவலைப்படாமல் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளேன்.வந்ததற்கு பலனாக கட்சிக்கு ஐந்து லட்சம் நிதியாக கிடைத்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முதல் முதலாக தேர்தல் நிதியை வழங்கியுள்ளார். அவர் கைராசிப்படி, நாளையில் இருந்து தேர்தல் நிதி குவியப் போகிறது.
திமுக ஆட்சி அமைந்தபோது, கொரோனா என்ற கொடிய நோய் பாதிப்பைச் சந்தித்தோம். அதில் இருந்து மீண்டபோது, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தொடர் மழை பெய்தது. நான் 96-ம் ஆண்டு சென்னை மேயராக பொறுப்பேற்றதற்கு அடுத்த நாள் முதல் சென்னயில் 10 நாட்கள் தொடர் மழை பெய்தது. அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, மழை பாதிப்பை பார்வையிட்டபோது, 'சென்னையில் ஸ்டாலின் மேயரானது முதல் மழை பேயராகவே இருக்கிறது' என்று சொன்னார். அதுபோல், தற்போதும் மழை தொடர்ந்து பெய்கிறது. நம்ம அதிஷ்டத்தால் குடிநீர் பஞ்சமே இருக்காது. இது நம்ம ராசி ராசி. வாக்களித்த உங்கள் ராசி.
இந்த சூழலில் செந்தில்குமாரின் அண்ணன் மகனுக்கு திருமணம் நடக்கிறது. செந்திலின் தந்தை 1977-ல் திமுக வார்டு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். அதன்பின் செந்தில் 1980-81ல் இளைஞரணி உறுப்பினராகச் சேர்ந்து, வார்டு செயலாளர், மாணவரணி, மாவட்ட பொருளாளர் பதவிகளை வகித்து தற்போது மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். நாளைக்கு இதைவிட பெரிய பொறுப்புகள் அவருக்கு வரும். வர வேண்டும். படிப்படியாக வளர்ந்து சிறந்த செயல்வீரராக அவர் விளங்குகிறார்.
முன்பெல்லாம், சீர்திருத்த திருமணம், சுயமரியாதை உணர்வோடு நடந்தால், அதனை கேலி, கிண்டல் செய்து கொச்சைப்படுத்தியது உண்டு. ஆனால், இன்றைக்கு சீர்திருத்தத் திருமணம் இல்லை என்றால்தான் ஆச்சர்யமளிக்கிறது. 1967-ல் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றபோது, சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று உத்தரவிட்டது தான் அதற்கு காரணம். அதன்பிறகு இன்று பல இடங்களில் சீர்திருத்த திருமணம் நடப்பது பரவியுள்ளது மகிழ்ச்சியளிக் கிறது.
தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்வதால், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. குடிநீர் பஞ்சமில்லாத சுபிட்சமான நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றி வருகிறோம். இந்த ஆட்சிக்கு பக்கபலமாக நீங்கள் இருக்க வேண்டும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இவ்விழாவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா ,வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம்,கேபிள் டிவி சேர்மன் குறிஞ்சி என் சிவகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார்,மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி,துணை மேயர் செல்வராஜ்,மாநகர செயலாளர் சுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்