சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் கரும்பு தின்பதற்காக உலா வரும் யானை கூட்டம்
சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் கரும்பு தின்பதற்காக உலா வரும் யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட் டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் யானை கூட்டம் உலா வருகின்றன. பண்ணாரி சோதனை சாவடி அருகே கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதைப்போல் தமிழகத்தில் இருந்தும் கர்நாடகாவு க்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில் கரும்புகளை ஏற்றி சென்று வரும் லாரிகளை கடந்த சில நாட்களாக யானை கூட்டங்கள் வழிமறித்து கரும்புகளை தின்பது தொடர்கதையாகி வருகிறது. கரும்பு கட்டுடைகளை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள் சில நேரம் பாரங்கள் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் உள்ள சாலையோரம் கரும்பு கட்டுகளை தூக்கி வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் யானைகள் கரும்புகளை தின்று பழக்கப்ப ட்டதால் அதன் காரணமாக தினமும் அந்த பகுதியில் யானைகள் வருகின்றன.
கரும்புகளை ஏற்றி வரும் லாரிகளுக்காக யானைகள் காத்திருக்கின்றன. பின்னர் கரும்புகளை ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருகின்றன. இதனால் இந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
இது குறித்து வனத்து றையினர் கூறும் போது, பண்ணாரி சோதனை சாவடி அருகே கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் யானை கூட்டம் உலா வருகின்றன. கரும்பு கட்டுகளை சாப்பிடுவதற்காக யானைகள் வருகின்றன. எனவே இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சாலையில் இறங்கி நடமாட வேண்டாம். அதைப்போல் யானை கூட்டங்களை செல் போனில் படம் எடுக்கக் கூடாது என எச்சரித்தனர்.