நசியனூர் அருகே உயர் மின் கோபுரம் முன்பு விவசாயிகள் போராட்டம்

உரிய இழப்பீடு வழங்கக்கோரி நசியனூர் அருகே உயர் மின் கோபுரம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-03 10:30 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தமிழகத்தில் விவசாயிகளின் விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ராசிபாளையம் முதல் தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு ஆகிய தாலுகா வழியாக உயர் மின் கோபுரம்  விளைநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை இந்த பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் அதையும் மீறி விவசாய நிலங்களில் உயர்ந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மேலும் அரசு சார்பில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்களில் பெரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி ஈரோட்டில் நசியனூர், சித்தன் குட்டை அருகே உள்ள உயர் மின் கோபுரம் விளைநிலங்களில் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழக விவசயிகள் போராட்டக்குழு சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் கவின் தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பணிகள் தற்போது விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு ஆணை 54 படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News