வரத்து குறைவு.. ஈரோடு, பெருந்துறை பகுதியில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு...

ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதியில் தக்காளி விலை திடீரென இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

Update: 2023-01-19 06:35 GMT

ஈரோடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தக்காளி.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறையத் தொடங்கியதால், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதியில் தக்காளி விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் தினமும் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். ஈரோடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, தாளவாடி, அனந்தபூர், கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுவது உண்டு.

சமீபத்தில் 10 டன் தக்காளி வரத்து இருந்ததால் கடந்த வாரம் ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரரத்து குறையத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநில கோளாறில் இருந்து மட்டுமே தற்போது தக்காளி வரத்து உள்ளது.

மற்ற பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து இல்லாததால் கடந்த சில நாட்களாக 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் வரத்து மேலும் குறையத் தொடங்கினால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

பெருந்துறை பகுதியில்:

இதேபோல பெருந்துறை பகுதியிலும் தக்காளி கிலோ 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகிறது. பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 20-க்கு விற்பனையானது. கடும் பனிப்பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வாரத்துக்குரிய தொடங்கி உள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் 45 வரை விற்பனையாகிறது.

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் இருப்பதால் தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதாகவும், தேவைக்கு போதிய வரத்து இல்லாமல் குறைவாக இருப்பதால் தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருவதாகவும், இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதன் பிறகு விலை குறைய தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News