சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை அகலப்படுத்த கோரிக்கை..
Sennimalai Murugan-வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் விபத்துகளை தடுக்கும் வகையில் தார்ச் சாலை யை அகலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தல்
Sennimalai Murugan-சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் பக்தர்களின் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் நேரிடும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் தார்சாலையை அகலப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு சென்னிமலைமுருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் பக்தர்களின் வாகன போக்குவரத்து அதிகரித்ததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் தார்சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகன் கோவில் சென்னிமலையில் உள்ள முருகன் கோவில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 12.2.1984 அன்று படிக்கட்டுகள் வழியாக மாட்டு வண்டி மலை ஏறியது என பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது. சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்ல முன்பு 1320 படிக்கட்டுகள் மட்டும் இருந்தது. அதன்பிறகு வாகனங்கள் செல்லும் வகையில் கடந்த 15-2-1963 அன்று 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலைப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு ஒரே வருடத்தில் ரூ.58 ஆயிரத்து 576 செலவில் சாலை அமைக்கும் பணியை நிறைவு செய்து 15.2.1964 முதல் மலைப்பாதையில் கார்கள் மட்டும் செல்லும் வகையில் அனுமதிக்கப்பட்டது.
மண் அரிப்பு அதன்பிறகு நாளடைவில் மண் சாலை தார்ச்சாலையாக மாற்றப்பட்டு தற்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. மழைக்காலங்களில் முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு சென்னிமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது தார்சாலை சீரமைக்கப் பட்டது. அதன்பிறகு பல முறை பலத்த மழை பெய்ததால் தார் ரோட்டின் ஓரங்களில் மீண்டும் அதிக அளவில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை கோவில் நிர்வாகத்தினர் சீரமைப்பு செய்து வந்தனர். ஆனால் நிரந்தரமான பராமரிப்பு இல்லாததால் மீண்டும் தார்சாலை ஓரங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
சாலை வசதி சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அன்று மட்டும் சராசரியாக 3 ஆயிரம் இரு சக்கர வாகனங்களும், 1,000-க்கும் மேற்பட்ட கார்களும் மலைப்பாதை வழியாக சென்று வருகிறது. இதன் மூலம் வாகன கட்டணமாக கோவில் நிர்வாகத்துக்கு ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த நாட்களில் கோவிலுக்கு சொந்தமான 2 பஸ்கள் மூலமாக தலா ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் டிக்கெட் கட்டணமாக வசூல் ஆகிறது.
மேலும் உண்டியல் காணிக்கையாக ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் கிடைப்பதால் முதல் நிலை கோவில் அளவுக்கு சென்னிமலை முருகன் கோவிலின் தரம் உயர்ந்துள்ளது. ஆனால் கோவிலுக்கு செல்ல பாதுகாப்பான சாலை வசதி இல்லை என பக்தர்கள் கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதுகுறித்து சென்னிமலை முருகன் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வரும் பக்தர்கள் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை மட்டுமின்றி சஷ்டி, கிருத்திகை, அமாவாசை உள்ளிட்ட அனைத்து விஷேச நாட்களிலும் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் இரு ஓரங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக இருப்பதுடன் கல் குவியலாக காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் தார் ரோட்டில் இருந்து கீழே இறங்கினால் பள்ளத்தில் தான் விழ வேண்டும். அப்படி குடும்பத்தோடு விழுந்தவர்கள் ஏராளம். இரவு 8 மணி பூஜையில் கலந்து கொள்ள பெரும்பாலான பக்தர்கள் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் வருவார்கள்.
அவர்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். அதனால் உடனடியாக சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையை அகலப்படுத்தி விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவா்கள் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2