சங்க நிர்வாகி மீது தாக்குதல்: ஈரோடு தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பு கண்டனம்

ஈரோட்டில் 80 -க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று முதல் தொடக்கி உள்ளனர்

Update: 2022-11-18 09:00 GMT

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று  புகார் மனு அளித்த ஈரோடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினர்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் திரளான சங்க உறுப்பினர்கள் சார்பில்,  லாரி டிரான்ஸ்போர்ட் சங்க செயலாளர் பிங்களனை,  நேற்று தாக்குதலில் ஈடுபட்ட சுமை பணியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

இது தொடர்பாக  அளிக்கப்பட்ட  மனு விவரம்: ஈரோடு அசோகபுரம் பகுதியில் உள்ள வி. ஆர். எல். லாரி நிறுவனத்தில் பணிபுரியும் 7 சுமை பணியாளர்கள் காலதாமதமாக சரக்குகளை கையாளுவதாகக்கூறி, அவர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்தது. மேலும் சேலத்தில் இருந்து அவர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஐந்து பணியாளர்களை ஈரோட்டுக்கு வரவழைத்தது அவர்களைக் கொண்டு நேற்று சரக்குகளை இறக்கும் பணியில் ஈடுபட்டது.

இந்நிலையில், பணி நீக்கம்  செய்யப்பட்ட ஏழு சுமை பணியாளர்கள் மற்றும்  நூற்றுக்கணக்கான சம்பந்தம் இல்லாத  வெளி ஆட்களை திரட்டி வந்தனர் லாரி அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்தனர் லாரி ட்ரான்ஸ்போர்ட் அசோசியேஷன் செயலாளரை காவல் ஆய்வாளர் முன்னிலையில் கொடூரமாக தாக்கியுள்ளனர். தற்போது அவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதே போல கடந்த 29 7 2022 அன்று மூலப்பாளையம் பகுதியில், இதே போல் நீதிமன்ற உத்தரவுபடி சரக்குகளை எடுத்து சென்ற சரக்கு உரிமையாளர்களை சுமைப் பணியாளர்கள் தடுத்தனர்.  இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் இல்லை. கொலை வெறி யோடு நேற்று தாக்குதல் நடத்தியவர்களையும்  அத்து மீறி லாரி அலுவலகத்தில்  நுழைந்தவர்கள்  மீது உரிய சட்டப் பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் .

முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை மதித்து வணிகர்களுக்கு சரக்குகளை கையாள தகுந்த   பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டி நீதிமன்றத்தை அணுகுவோம். சங்க நிர்வாகி  பிங்களனை தாக்கியவர்களை கைது செய்யவில்லை என்றால், அனைத்து வியாபாரிகளும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும்  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரோட்டில் 80 -க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று முதல் தொடக்கி உள்ளனர். இதன் காரணமாக  ஈரோட்டில் இருந்து வெளி மாவட்ட மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், உணவு எண்ணெய், முட்டை போன்ற அத்தியாவசியப் பொருள்களை லாரிகள் மூலம்  அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது.  இதேபோல வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்குகள் வருவது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக  நாளொன்றுக்கு சுமார் ரூபாய் 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News