வேளாண்மை பட்டதாரிகள் தொழில் தொடங்க அழைப்பு
சென்னிமலை மற்றும் ஈரோடு வட்டாரங்களைச் சார்ந்த வேளாண்மை பட்டதாரிகள் தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம்
சென்னிமலை மற்றும் ஈரோடு வட்டாரங்களைச் சார்ந்த வேளாண்மை பட்டதாரிகளை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வீதம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் (Entrepreneur) என்பவர் ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆவார். அத்தொழில் முயற்சியில் வரக்கூடிய சிக்கல்களுக்கு தம் துணிகர முயற்சி மற்றும் யோசனையைக் கொண்டு செயல்படும் பொறுப்புடையவராக திகழ முடியும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் குறைந்த பட்சம் இளநிலை வேளாண்மை, இளநிலை தோட்டக்கலை அல்லது இளநிலை வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவராக இருக்கக் கூடாது. கணினி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்ற தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் முன் வைக்கும் திட்டத்தின் உரிமையானது ஒரு நபருக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்களுக்கான செலவு முன் வைக்கும் திட்ட மதிப்பில் சேர்க்க முடியாது.
விண்ணப்பதாரர் 21 வயது முதல் 40 வயதுடையராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அக்ரி கிளினிக் இயற்கை உரம் தயாரித்தல, மரக்கன்று உற்பத்தி செய்தல். நாற்றாங்கால் பண்ணை அமைத்தல், பசுமை குடில் அமைத்தல் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், வேளாண் மருந்தகம் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருள்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க நிதியுதவி அளிக்கப்படும்.
தொழில்முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விரிவான திட்ட அறிக்கையுடன் ஜனவரி 15ம் தேதிக்குள், திண்டல், வித்யா நகரிலுள்ள ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு சென்னிமலை மற்றும் ஈரோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாததன் காரணமாக வாழ்நாள் முழுவதும் சம்பளத்திற்கு பணி செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.இன்னும் சிலருக்கு முறையான திட்டங்கள் இருக்கும். ஆனால் பணம் இருக்காது. நம்மை நம்பி யார் பணம் தரப்போகிறார்கள் என்று எண்ணி திட்டத்தையே கைவிடுபவர்கள் பலர். இவர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கமாக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது என தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர்.