ஈரோடு இடைத்தேர்தல் எடப்பாடியாருக்கு வெற்றி சரித்திரத்தை உருவாக்கும்: சொல்லூர் ராஜூ

சுனாமி அலைபோல் அதிமுகவுக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று முன்னாள் அமைச்சர் சொல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2023-02-13 10:15 GMT

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

திமுக ஆட்சி ஊழல் குறித்து சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்டது. அதன் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்தது திமுக. அதேபோன்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கவும் சம்மதித்தது. திமுக முன்னாள் இணை அமைச்சர் காந்தி ராஜன் தான் நீட் தேர்வு கொண்டு வர சம்மதம் தெரிவித்தவர். ஆனால் நீட்டை ரத்து செய்வதாக கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. இதுவரை ரத்து செய்யவில்லை. பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக கடந்த நான்காண்டுகளில் ஈரோடு மாநகரில் ரூபாய் 484 கோடி ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் உட்பட பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் ஒரு திட்டம் கூட ஈரோடு மாநகரில் செயல்படுத்தப்படவில்லை. திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றி சரித்திரத்தை படைத்தது. மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தேர்தல்கள் ஜெயலலிதாவுக்கு வெற்றி சரித்திரத்தை உருவாக்கியது. அதேபோன்று ஈரோடு கிழக்கு தேர்தல் எடப்பாடியாருக்கு வெற்றி சரித்திரத்தை உருவாக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இது அச்சாரமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் முனுசாமி, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர் மற்றும் அண்ணா திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News