ஈரோடு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.;
ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையத்தினை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் , செலவினப் பார்வையாளர் கௌதம்குமார் மற்றும் காவல்துறை பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகின்ற மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று (பிப்.7) ஈரோடு, சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் வைப்பறைகள் 1 மற்றும் 2, தபால் வாக்குப் பெட்டிகள் மற்றும் தபால் வாக்குகளை எண்ணும் அறைகளை மாவட்டத் தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், செலவினப் பார்வையாளர் கௌதம்குமார் மற்றும் காவல்துறை பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அதில் பெறப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான புகார்கள் தொடர்பாக பதியப்பட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்தல் தொடர்பாக 198 புகார்கள் வந்துள்ளதாகவும் அதன்மேல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் ஈரோடு மாநகராட்சி இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு அறையினில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான விளம்பர செலவினங்கள் தொலைக்காட்சி, சமூக வளைதளங்கள், வானொலி மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு வழங்கும் இடம், வாகனத்தணிக்கை கட்டுப்பாட்டு அறை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்து மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மீனாட்சி, வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், உதவி செயற்பொறியாளர் கௌரி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.