ஈரோடு: சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்களில் 24 மணி நேர உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.;
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்களில் 24 மணி நேர உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டுநர், நடத்துநர், ஆர்சி, எப்சி பணிகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க வெளியிட்டுள்ள டெண்டரை கைவிட வேண்டும். உழைப்பு சுரண்டலுக்கும், நவீன கொத்தடிமை முறைக்கும் வழிவகுக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும்.
விடுப்பு மறுத்து சம்பள இழப்பு ஏற்படுத்தக் கூடாது. தனியாருக்கு சாதகமாக வழித்தட பேருந்துகளை நிறுத்தி சிறப்பு பேருந்துகள் என இயக்கக் கூடாது. டீசல் சேமிப்பு என்ற பெயரில் தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது. பணிமனை தொழிலாளர்கள் மீது வேலைப்பளுவைத் திணிக்கக் கூடாது.
வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 103 அகவிலைப்படி உள்ளிட்ட பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.
ஈரோடு ஈ1, ஈ3 பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்திற்கு செயலாளர் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். பன்முக தலைவர் என்.முருகையா உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். மண்டல பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி சிறப்புரையாற்றினார்.
ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகிகள் ஆர்.அர்ஜுனன், கே.என்.துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சத்தியில் கிளை தலைவர் என்.தேவராஜ் தலைமை வகித்தார். மண்டல தலைவர் கே.மாரப்பன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் கே.எம்.விஜயகுமார், க.இரா.திருத்தணிகாசலம் மற்றும் வாசுதேவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நம்பியூரில் கிளை தலைவர் சி.சண்முகம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மண்டல பொருளாளர் சி.அய்யாசாமி சிறப்புரையாற்றினார். ஓய்வு பெறோர் அமைப்பின் நிர்வாகிகள் சி.வெள்ளியங்கிரி, டி.கே.வீராசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பெருந்துறையில் கிளைதலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். கண்ணியப்பன், நேசகுமார் மற்றும் ஓய்வு பெற்ற அமைப்பின் மண்டல தலைவர் ஜெகநாதன் ஆகியோர் உரையாற்றினர். பவானியில் கிளை தலைவர் ஏகாம்பரம் தலைமை வகித்தார். சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.