தேர்தல் பத்திர முறைகேடு: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

ஈரோட்டில் தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-17 03:30 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

ஈரோட்டில் தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர்கள் பாஸ்கர் ராஜ், புனிதன், பாபு என்கிற வெங்கடாசலம், அம்மன் மாதேஷ், பொதுச்செயலாளர்கள் கனகராஜ், சாகுல் அமீத், வின்சென்ட், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜவஹர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மண்டல தலைவர் ஜாபர் சாதிக் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

தேர்தல் பத்திர திட்டத்தில் பா.ஜனதா கட்சி ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. பா.ஜனதாவின் ஆட்சி மூலம் கட்சிக்கான நிதியை தேர்தல் பத்திரமாக திரட்டி உள்ளனர். அவர்களுக்கு நிதி அளித்தவர்கள் பட்டியலை பா.ஜனதா வெளியிட வேண்டும்.

மேலும் பா.ஜனதாவுக்கு நிதி வழங்கியவர்களும் தாங்கள் வழங்கிய நிதி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இது தொடர்பான முறைகேட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், தொழிலாளர் காங்கிரஸ் டி.சி.டி.யு. மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், சேவாதள மாநில செயலாளர் பேபி, சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பாஷா, மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி தீபா, மண்டல தலைவர் விஜய பாஸ்கர், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் சூர்யா சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News