ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு..!
ஈரோடு மாவட்டத்தில் 2024-25 கல்வி ஆண்டில் 5,000 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.70 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2024-25 கல்வி ஆண்டில் 5,000 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.70 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வங்கியாளர்கள் கல்விக்கடன் வழங்குவது தொடர்பாக கல்லூரி நிர்வாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி மற்றும் கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், இன்று (19ம் தேதி) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவை மற்றும் வித்யாலட்சுமி, ஜன்சமர்த் ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 2024-25 கல்வி ஆண்டில் 5,000 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.70 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக்கடன் வழங்குவதில் கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், வங்கிகளுக்கும் இடையில் பாலமாக செயல்பட வேண்டும்.
கல்விக்கடன் பெறுவது குறித்து மாணவ, மாணவியர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்குவது, அவர்களிடையே குழுக்கள் ஏற்படுத்தி கல்விக்கடன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அதில் கல்விக்கடன் தேவைப்படும் நபர்களுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து விளக்குவது, கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவியர்களுக்கு வித்யாலட்சுமி (https://www.vidyalakshmi.co.in/Students) மற்றும் ஜன்சமர்த் (https://www.jansamarth.in/home) ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பித்துக் கொடுப்பது ஆகிய பணிகளை முன்னெடுத்து நடத்திட வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகம், கல்விக்கடன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பெறும் நபர்களுக்கு விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வங்கிகளின் உதவியோடு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்விக்கடன் வழங்குவது தொடர்பாக இன்று பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்ற மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, நடைபெற்ற பயிற்சியில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 நர்சிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், 16 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 14 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 5 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 41 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்விக்கடன் விண்ணப்பிப்பது குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாநில முதுநிலை ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.