பள்ளிபாளையத்தில் நவீன பொது சுத்திகரிப்பு நிலையம்: ஈரோடு அதிமுக வேட்பாளர் உறுதி
பள்ளிபாளையத்தில் சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காண நவீன பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என பிரசாரத்தின்போது ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மக்களிடத்தில் உறுதி அளித்தார்.
பள்ளிபாளையத்தில் சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காண நவீன பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என பிரசாரத்தின்போது ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மக்களிடத்தில் உறுதி அளித்தார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், இன்று முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தலைமையில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் மற்றும் பள்ளிபாளையம் நகரத்திற்கு உட்பட்ட நெட்ட வேலம்பாளையம், அண்ணா நகர், இந்திரா நகர், புளியம்பட்டி, சின்ன ஆலந்தூர், பழையபாளையம் குடித்தெரு, நல்லாகவுண்டம்பாளையம், நாடார் தெரு, புதூர், முனியப்பன்பாளையம், ஆனங்கூர், தண்ணீாப்ந்தல்பாளையம், நத்தமேடு, அல்லிநாயக்கன்பாளையம், பச்சாம்பாளையம், கவுண்டனூர், பள்ளத்தூர், புத்துமாரியம்மன் கோயில், காந்திபுரம், அன்னி மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், பெரியார் நகர், 18 அடி கிராஸ் சாலை, திருச்செங்கோடு சாலை, ஆண்டிக்காடு, வெடியரசம்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், சில இடங்களில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருடன் வீதி, வீதியாக நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திறகு வாக்கு சேகரித்தார். அப்போது, வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மக்களிடத்தில் பேசுகையில் கூறியதாவது, பள்ளிபாளையம் பகுதியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை களைய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
சாயக்கழிவு பிரச்சனையை தீர்க்க பெரிய அளவிலான நவீன பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஈரோடு-பழனிக்கு புதிய ரயில் சேவை துவங்க மத்திய அரசை வலியுறுத்தி பெற்று தருவோம்.
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கிடைக்கும் வகையில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பிற்படுத்தப்பட்டோருக்கான வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் மற்றும் வீட்டுக்கு நிலம் வழங்கும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவோம். நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுப்போம். நெசவு தொழில் செய்பவர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவோம்.
நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க தொடர் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் தெரு மின் விளக்குகள், முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆற்றல் அசோக்குமார் பேசினார்.
இந்த பிரசாரத்தில் அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.