ஈரோட்டில் 25 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து!
ஈரோட்டில் கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.;
ஈரோட்டில் கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கடந்த மாதம் பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஆட்சியர் அலுவலகம், கொல்லம்பாளையம், மூலப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்றதாக 163 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 1,481 வழக்குகள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 87 வழக்குகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 263 பேர் மீது, போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், வாகன உரிமையாளர்களுக்கு ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர். அதேசமயம், குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்வதற்காக போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி, கடந்த மாதத்தில் 25 பேரின் ஓட்டுநர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.