ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குச்சாவடிகளுக்கான வரைவுப் பட்டியல் வெளியீடு

Erode News- ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குச்சாவடி மையங்களின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (29ம் தேதி) வெளியிட்டார்.

Update: 2024-08-30 02:30 GMT

Erode News- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025-ஐ முன்னிட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்ட போது எடுத்த படம்.

Erode News, Erode News Today- ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குச்சாவடி மையங்களின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (29ம் தேதி) வெளியிட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025ஐ முன்னிட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 2025ஐ மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 237, ஈரோடு மேற்கு தொகுதியில் 302, மொடக்குறிச்சி தொகுதியில் 277, பெருந்துறை தொகுதியில் 264, பவானி தொகுதியில் 289, அந்தியூர் தொகுதியில் 262, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 296, பவானிசாகர் (தனி) தொகுதியில் 295 என மொத்தம் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகள் உள்ளன. 8 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி (27.03.2024) 19 லட்சத்து 66 ஆயிரத்து 496 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது, ஈரோடு மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடி நிலையங்கள் உருவாக்குதல், வாக்குச்சாவடியை இடம் மாற்றம் செய்தல், வேறு கட்டடத்திற்கு மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், பகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணியின்போது, ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-க்கு மிகையாக இருப்பின் அந்த வாக்குச்சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 2 கி.மீக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்துதல், பழுதடைந்த நிலையில் உள்ள வாக்குச்சாவடிகள் கண்டறிதல், வாக்குச்சாவடி அமைவிடம், கட்டட இடம் மாற்றம், பெயர் மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, நகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள பகுதிகளில் தனியார் கட்டடங்களில் தகுதியின் அடிப்படையில் புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், வாக்குச்சாவடியை பிரிக்க வேண்டிய சூழ்நிலையில் அனைத்து வாக்காளர்களுக்கான புதிய வாக்குச்சாவடியாக அமைக்கப்படுமே தவிர துணை வாக்குச்சாவடியாக அமைக்கப்படாது. வாக்காளர்கள் தங்கள் பகுதி சார்ந்த வாக்குச்சாவடி விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் பார்வையிடலாம்.

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மாநகராட்சி ஆணையாளர், ஈரோடு, வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர், ஈரோடு மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர், கோபிசெட்டிபாளையம் அலுவலகங்களில் வரும் 4ம் தேதி வரையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட வேண்டும்.

கோரிக்கைகள், ஆட்சேபணைகள் ஏதேனும் வரப்பெறின் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான இனங்களாக இருப்பின் அக்கோரிக்கைகள் ஏற்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா,  ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) சிவசங்கர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News