ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் பற்றி தெரியுமா?

Erode DMK Candidate: திமுக இளைஞரணி மாநில துணை செயலாளரான கே.இ.பிரகாஷ் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2024-03-20 12:21 GMT

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ்.

திமுக இளைஞரணி மாநில துணை செயலாளரான கே.இ.பிரகாஷ் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது.

முதன்முதலாக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய திமுக, கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்கி தொகுதி பங்கீட்டையும் முதலில் நிறைவு செய்தது. திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது.

ஏற்கெனவே விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள், ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இன்று திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கே.இ.பிரகாஷை (வயது 48) அறிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் விபரம்:- 

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் திமுக இளைஞரணி மாநில துணை செயலாளரகவும், மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். மொடக்குறிச்சி அடுத்துள்ள காணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார். இவர் விவசாய குடும்ப பின்னணி கொண்டவர்.

தற்போது கெமிக்கல் வியாபாரம் செய்து வருகின்றார். இவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி/ 1977ம் ஆண்டு முதல் தற்போது வரை திமுக கிளைச்செயலாளராக உள்ளார். இதனால், சிறுவயதிலேயே பிரகாஷ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இவரது மனைவி கோகிலா (பட்டதாரி). இவர், திமுகவில் ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார். இவருக்கு கன்யா என்ற மகள், இனியன் என்ற மகன் உள்ளனர். இளைஞரணிக்கு தேர்தலில் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், பிரகாசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News