ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சி தொடக்கம்
ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை இன்று தொடங்கி வைத்தார்.;
கைத்தறி துறையின் சார்பில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி விற்பனை மற்றும் கண்காட்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 1905ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை போற்றும் வகையிலும் கைத்தறி நெசவாளர்களின் பங்கினை கௌரவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் பெருமையை போற்றும் விதமாக தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதலாவது தேசிய கைத்தறி தினம் தமிழ் நாட்டில் 07.08.2015 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
தற்பொழுது 9வது தேசிய கைத்தறி தினமானது இன்று ஆகஸ்ட் 07 ஈரோடு மாவட்ட கைத்தறிதுறை சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் மாவட்ட அளவிலான கைத்தறி துணிகளின் சிறப்பு கண்காட்சி மற்றும் தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது இக்கண்காட்சி இன்று (ஆகஸ்ட் 07) மற்றும் நாளை (ஆகஸ்ட் 08) ஆகிய 2 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் சென்னிமலை போர்வைகள், பவானி ஜமக்காளம், சால்வைகள், மெத்தை விரிப்புகள், காட்டன் சேலைகள், கைத்தறி துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் பட்டு சேலைகள் உள்ளிட்ட விற்பனை இரகங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இரகங்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 190 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 56 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் ஆக மொத்தம் 246 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இம்மாவட்டத்திலுள்ள இந்த 246 சங்கங்களில் 50,696 கைத்தறி நெசவாளர்களும், 7,054 விசைத்தறி நெசவாளர்களும் உள்ளனர். கைத்தறிகளில் பெட்ஷீட், படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலை, ஜமுக்காளம், துண்டு, மேட், காட்டன் சேலை, மென்பட்டுசேலை, ஆகிய இரகங்கள் உற்பத்தி செய்து 20% தள்ளுபடி மான்யத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஈரோடு சரகத்தில் 332 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். நெசாவாள் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 6510 உறுப்பினர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 2022-2023-ம் ஆண்டில் 594 பயனாளிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். மேலும் மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 5687 உறுப்பினர்களும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 12968 உறுப்பினர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 100-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் நெசவாளர்கள் அதிக செறிவு உள்ள 9 பகுதிகளில் மருத்துவமுகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரின் அறிவிப்பின்படி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கையில் ஆண்டுக்கு ரூபாய் 21 கோடி கூடுதல் செலவினத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு மானியமாக வழங்கப்படும் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தி நகர்ப்புற நெசவாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கிராமப்புறத்தில் ஆவாஷ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 28 பயனாளிகளில் 11 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாநில சங்க உற்பத்தி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டிற்கு 146 சங்கங்களுக்கு ரூ.27.66 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகள் உற்பத்தி செய்து வழங்கிட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு, நாளது தேதி வரை ரூ.10.72 கோடி மதிப்பிற்கு ஜவுளிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கைத்தறி பொருட்களின் தரத்தை உயர்த்தவும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், சந்தை படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ரூ.2 கோடி செலவில் ஈரோடு சரகத்திலுள்ள சென்னிமலைப் பகுதியில் முருகங்கதொழுவு என்ற கிராமத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.
மேலும் முத்ரா திட்டத்தின் கீழ் 2023-2024ம் ஆண்டிற்கு 1400 குறியீடு நிர்ணயிக்கப்பட்டு 366 பயனாளிகளுக்கு ரூ.183.50 லட்சம் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 300 யூனிட் விலையில்லா மின்சாரத்தில் 8524 நெசவாளர்களும், விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 1000 யூனிட் விலையில்லா மின்சாரத்தில் 9987 நெசவாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.
ஈரோடு சரகத்தில் தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் பெரிய அளவிலான கைத்தறி குழுமம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும், மேலும் கைத்தறி பொருட்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி கைத்தறி நெசவாளர்கள் வாழ்வு மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, 10 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான முத்ரா கடனுதவிகள் மற்றும் 10 நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்ட அட்டையினையும் வழங்கினார். முன்னதாக, மேயர் நாகரத்தினம் ஈரோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில், கைத்தறி துறையின் சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நெவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி துறை உதவி இயக்குநர் சரவணன், கைத்தறி கட்டுப்பாட்டு அலுவலர், கைத்தறி ஆய்வாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பணியாளர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.