சென்னிமலையில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

Erode News- சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-08-16 11:30 GMT

Erode News- சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம். 

Erode News, Erode News Today- சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சென்னிமலை பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் இன்று (16ம் தேதி) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பு செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிடும் வகையில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்.


அதன்படி, இன்று (காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட) சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பசுவப்பட்டி, எக்கட்டாம்பாளையம், எல்லைகிராமம், கொடுமணல், குப்பிச்சிபாளையம், முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு, ஒட்டப்பாறை, புதுப்பாளையம் மற்றும் புஞ்சைப்பாலத்தொழுவு ஆகிய 10 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது

இதில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் வசதி, சிறு பாலங்கள், புதிய கட்டிடங்கள், மயான வசதி, மயானத்திற்கு சாலை வசதி, சென்னிமலை பேரூராட்சியில் குடிநீர் வசதி, வடிகால் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, நியாயவிலைக்கடை, பேருந்து நிழற்குடை, விளையாட்டுத் திடல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா, நத்தம் புறம்போக்காக மாற்றி அமைத்தல், முதியோர் ஓய்வூதியம், மாவட்ட சுற்றுச்சூழல் துறையின் சார்பில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், ஓடையில் வளர்ந்துள்ள கோரைகள், இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் மானிய கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள், திருக்கோவில் திருப்பணிகள், 434 ஊரக குடியிருப்புகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சென்னிமலையில் உழவர் சந்தைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரிசெய்ய கூடிய கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் நிதியை பெற்று வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துத் துறைகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்த கருத்துகளை உடனடியாக செயல்படுத்தும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும். மேலும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் எவ்வித தங்கு தடையுமின்றி மக்களை சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News