பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஈரோடு ஆட்சியர் ஆய்வு செய்தார்.;

Update: 2024-10-15 13:30 GMT

பெருந்துறை சீனாபுரம் ஊராட்சியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுள்ளிபாளையம், குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (15ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, குள்ளம்பாளையம் ஊராட்சி குள்ளம்பாளையத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.59 லட்சம் வீதம் ரூ.50.26 லட்சம் மதிப்பீட்டில் 14 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், அதேப் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, நியாயவிலை கடை தெருவில் ரூ.3.64 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதியுடன் கூடிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், குள்ளம்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் மண்கரை அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும், அதேப் பகுதியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் புனரமைப்பு செய்யும் பணியினையும், கோபிகவுண்டன்பாளையம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சூரநாயக்கனூர் மம்முட்டிதோப்பு பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் எடை, உயரம், வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும், சீனாபுரம் ஊராட்சி, சீனாபுரத்தில் பிரதான் மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் ஈரோடு திங்களூர் ரோடு முதல் மேற்கு சீனாபுரம் வரை சாலை மேம்பாடு செய்யப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வுகளின்போது, பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், பிரேமலதா உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News