பவானி, அந்தியூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பவானி மற்றும் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பவானி வட்டாரத் தலைவர் சுத்தானந்த சீனிவாசன் தலைமை தாங்கினார். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டர்களை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்புதியத்தை வழங்க வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. இதில், பவானி வட்டாரத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. வட்டாரச் செயலாளர் வீரமுத்து, பொருளாளர் சந்தோஷ் குமார், மாவட்டப் பொருளாளர் தமிழரசன், முன்னாள் வட்டாரச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.