அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷா சூர மர்த்தனம் நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் மகிஷா சூரமர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது.;
அசுரனை வதம் செய்யும் மகிஷா சூரமர்த்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் மகிஷா சூரமர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் பண்டிகை தொடங்கியது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அந்தியூர் தவிட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பத்ரகாளியம்மன் கோவிலில் குதிரைக்கு மாவிளக்கு கொண்டு வந்து பூஜை சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) அசுரனை வதம் செய்யும் மகிஷா சூரமர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக புதுப்பாளையம் வனக்கோவிலில் இருந்து செல்லம்பூர் அம்மன் கோவிலுக்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை முன்செல்ல சப்பரத்தில் உற்சவ அம்மனை வைத்து பக்தர்கள் தோளில் சுமந்து சென்றார்கள். இதைத்தொடர்ந்து கோவிலில் குண்டம் அமைக்கப்படும் இடத்தில் எருமை பலி கொடுக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அசுரனை அம்மன் வதம் செய்துவிட்டதாக பக்தி கோஷம் எழுப்பினார்கள்.
பின்னர், பலி கொடுக்கப்பட்ட எருமையின் உடல் அந்த இடத்தில் புதைக்கப்பட்டு அதில் நடுகல் நட்டு மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஏராளமான எருமைகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினர். தொடர்ந்து , 26ம் தேதி கிராம சாந்தி மற்றும் காலை 11 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.இதனையடுத்து வருகிற ஏப்ரல் மாதம் 3ம் தேதி குண்டம், அதனைத்தொடர்ந்து 5ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது.