பவானி அருகே குறிச்சி மலைக்கரடில் ஆக்கிரமிப்பு: இடித்து அகற்றம்
Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே குறிச்சி மலைக்கரட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
Erode news, Erode news today- பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே குறிச்சி மலைக்கரட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி பகுதியில் குறிச்சி மலைக் கரடு உள்ளது. இந்த மலைக் காட்டுப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு மான், முயல் போன்ற வன விலங்குகளும் உள்ளன.
இந்த நிலையில், குறிச்சி மலைக்கரட்டில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு, பாதை அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச வீட்டு மனை வழங்கப்படுவதாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
இதுதொடர்பாக, விசாரிக்கச் சென்ற அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் கந்தசாமி நேற்று முன்தினம் தாக்கப்பட்டார். இதில், கந்தசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அந்தியூர் பச்சம்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (47) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பவானி வட்டாட்சியர் தியாகராஜ், மண்டல துணை வட்டாட்சியர் பெரியசாமி, வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் பவானி வட்ட நில அளவையாளர் முத்துராஜ், நில அளவையாளர்கள் சுந்தரேஷ், ரவி உள்ளிட்ட குழுவினர் நேற்று (ஜூன்.12) சம்பவ இடத்தில் அளவீடும், ஆய்வும் செய்தனர்.
அதில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலத்தில் பல நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்பட்டதும், பொக்லைன் இயந்திரம் மூலம் நிலத்தை சமன்படுத்தி கான்கிரீட் ரோடுகள் போடப்பட்டிருந்ததும், அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும், மலைப்பகுதியில் சோலார் பேனல் அமைத்து சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுக்க பணிகளும், 50-க்கும் மேற்பட்ட குடிசைகள் போடப்பட்டு, அக்குடிசைகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்படுவது போன்று குழாய்கள் பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள், அம்மாபேட்டை போலீசார் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் சாலை, 50 குடிசைகளும் இடித்து அகற்றப்பட்டன. பின்னர் இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. இதை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பலகையும் வைத்தனர்.
குறிச்சி மலைக்கரட்டில் ஏராளமான மரங்கள் உள்ளதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டதோடு இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளது. இங்கு, பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு வெட்டி அழிக்கப்பட்டதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எனும் கேள்வியும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.