புலிகள் காப்பகத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் திட்டத்தை கைவிட கோரிக்கை
புலிகள் காப்பகத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
புலிகள் காப்பகத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆகியோர் பேசும் போது, இந்தியா முழுவதிலும் உள்ள 54 புலிகள் காப்பகத்தில் உள்ள 591கிராமங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 801 குடும்பங்களை வெளியேற்றி, மறு குடியமர்த்த வேண்டும் எனவும், இதற்கான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் எனவும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ள வெளியேற்ற வேண்டிய கிராமங்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகங்களைச் சேர்ந்த 4, 113 குடும்பங்களும் அடங்கும். இதில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த 10 கிராமங்களும் 656 குடும்பங்களும் உள்ளடங்கியுள்ளது. இந்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மறு குடியமர்த்தல் உத்தரவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாடு அரசு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மறு குடியமர்த்தல் உத்திரவினை நிராகரிக்க வேண்டும். புலிகள் காப்பக மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் பொருட்டு 'புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு' என்ற பெயரில் அனைத்து தரப்பு மக்கள் இயக்கங்களை இணைத்து இதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் கிராமங்களின் கிராம சபைகளை கூட்டி வன உரிமைச் சட்டப்படி இதுகுறித்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் ஊராட்சி கிராம சபைகளிலும் இதுகுறித்த தீர்மானங்களை நிறைவேற்றச் செய்ய வேண்டும். அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் சத்தியமங்கலத்தில் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தாளவாடி, ஆசனூர், தலமலை, கடம்பூர் மற்றும் முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்களில் இருந்தும் கிராம பிரதிநிதிகள்,தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவர்கள் ஆசனூர் அருள்சாமி, கடம்பூர் ராமசாமி,தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்க தலைவர்கள் பெஜலட்டி பாலன், சிறு வடிவேல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.