அந்தியூர் அருகே சடலத்தை ஓடை நீரில் சுமந்து செல்லும் அவலம்: கிராம மக்கள் வேதனை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பாதை இல்லாததால் சடலத்தை ஓடை தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அந்தியூர் அருகே பாதை இல்லாததால் சடலத்தை ஓடை தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மைக்கேல்பாளையம் ஊராட்சி மந்தை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழந்தால் அவர்களின் உடல்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஓடை வழியாக சென்று அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் அடக்கமோ, தகனமோ செய்கிறார்கள்.
ஓடையில் தண்ணீர் இல்லாதபோது சிரமமின்றி கடந்து விடுகிறார்கள். ஆனால் வரட்டுப்பள்ளம் அணையில் உபரிநீர் திறந்து விடும்போது, ஓடையில் தண்ணீர் செல்லும். அப்போது இறந்தவர்களின் உடலை சவப்பாடையில் கட்டி, பெரும் சிரமப்பட்டு ஆபத்தான முறையில் சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து , அவருடைய உடலை தகனம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது ஓடையில் தண்ணீர் சென்றுகொண்டு இருந்தது. அதனால் உடல் வைக்கப்பட்டு இருந்த மூங்கில் பாடையை தோளுக்கு மேலே தூக்கியபடி, தட்டுத்தடுமாறி மறுபக்கம் கொண்டு சென்றனர்.
துக்க நிகழ்ச்சியால் ஏற்கனவே வேதனையில் இருக்கும் நாங்கள் உடலை அடக்கம் செய்ய செல்லும் போது இந்த ஓடையை கடந்து செல்வது எங்களுக்கு மேலும் வேதனை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் எங்கள் பகுதியிலேயே மயான வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.