ஈரோட்டில் தெருநாய்கள் கடித்து பசு மாடு உயிரிழப்பு: முதியவர் உள்பட இருவர் காயம்
ஈரோடு ஆர்.என்.புதூரில் தெருநாய்கள் கடித்ததில் பசு மாடு உயிரிழந்தது. மேலும், முதியவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
ஈரோடு ஆர்.என்.புதூரில் தெருநாய்கள் கடித்ததில் பசு மாடு உயிரிழந்தது. மேலும், முதியவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.என்.புதூர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. இதில் சில நாய்கள் நடந்து செல்லும் பொதுமக்களையும், வாகனத்தில் செல்லும் பொதுமக்களையும் விரட்டி கடித்து வந்தது.
இந்த நிலையில், ஆர்.என்.புதூர் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான சக்திவேல் (வயது 40) என்பவர் வளர்த்து வந்த 8 பசு மாடுகளில், ஒரு மாட்டை தெருநாய்கள் கடித்து குதறின.
மேலும், அதேபகுதியில் ஜீவரத்னம் என்பவர் வளர்த்து வந்த 2 பசு மாடு, ஒரு கன்றுக்குட்டியையும் தெருநாய்கள் கடித்து குதறியது.
இதைத் தொடர்ந்து, தெருநாய்கள் கடித்து, காயமடைந்த மாடுகள் ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சக்திவேலின் பசு மாடு சிகிச்சை பலனின்றி இறந்தது.
மேலும், ஆர்.என்.புதூர் சாலையில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் உள்பட 2 பேரை தெருநாய்கள் கடித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து வெறி பிடித்த நாய்களை விரட்ட முற்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தினர், நாய் பிடிக்கும் வாகனம் மூலம் கால்நடைகளையும், பொதுமக்களையும் கடிக்கும் தெரு நாய்களை பிடித்தனர்.
பின்னர், அந்த தெருநாய்கள் ஈரோடு சோலாரில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்று, தெருநாய்களுக்கு வெறி நோய் தடுப்பு ஊசியும், கருத்தடையும் செய்ய உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.