பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.;
பவானிசாகர் அணை.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட தாமதமாக தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, கோவை மாவட்டம் பில்லூர் அணை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும்-பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று (ஜூலை 27) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 7,215 கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தற்போது அணை நீர்மட்டம் 82.47 அடியாகவும், நீர் இருப்பு 17.03 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடி நீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1,105 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கீழ்பவானி பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.