கட்சித் தலைமை வாய்ப்பளித்தால் இடைத்தேர்தலில் போட்டி: எம்.யுவராஜா
கட்சித் தலைமை மற்றும் கூட்டணித் தலைமை வாய்ப்பளித்தால் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.;
கட்சித் தலைமை மற்றும் கூட்டணித் தலைமை வாய்ப்பளித்தால் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.
ஈரோட்டில் தமாகா சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு தமாகா மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் விடியல் சேகர், துணைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். முன்னதாக தமாகா சார்பில் ரூ.4,000 மதிப்பிலான 3 புத்தகங்கள் அடங்கிய மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கையேடு மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து எம். யுவராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் வகையில் மாணவ, மாணவிகள் தங்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ளும் வகையில், ஒவ்வொருவருக்கும் ரூ. 4,000 மதிப்பிலான 3 புத்தகங்கள் அடங்கிய கையேட்டை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பொங்கல் விழாவை முன்னிட்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக 300 பேருக்கு இப்புத்தகங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தன் அடிப்படையில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன். இதுகுறித்து எங்கள் தலைவர் ஜி.கே.வாசன், கூட்டணிக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்துவார். அந்த முடிவின்படி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். தேர்தலைச் சந்திக்க நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம் என்றார்.