ஈரோட்டில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆலோசனைக் கூட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.;

Update: 2024-07-18 14:00 GMT

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (18ம் தேதி) நடைபெற்றது.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஈரோடு வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட துறைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து, அலுவலர்களுடன் விவாதித்தார். இதில், பள்ளிக்கல்வித்துறையின் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து, சிறு, சிறு பழுதுகளை உடனடியாக நிவர்த்தி செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 சுகாதார வளாகங்களில் கால இடைவெளியில் தூய்மை பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நியாய விலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு குறித்தும், அலுவலகங்களின் தேவைகள் குறித்தும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் அடிப்படைத் தேவைகள் குறித்து ஆய்வு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.


மேலும், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, ஈரோடு மாநகராட்சி ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு, அவர்களின் உயரம், எடை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அதேப்பகுதியில் உள்ள சிந்தாமணி நியாயவிலைக்கடையில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்து, பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து,  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஈவிஎன் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் குடிநீர் வசதி, கழிப்பறை, சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், கொல்லம்பாளையம் நகர்ப்புற நல்வாழ்வு மையம் மற்றும் குடியிருப்பு பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் சரவணகுமார், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், நகர் நல அலுவலர் பிரகாஷ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News