சிபிஎம் பொதுக்கூட்டத்தில் இடையூறு செய்த பாஜக நிர்வாகி மீது புகார்
கீழ்வாணியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் இடையூறு செய்த பாஜக நிர்வாகி மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.;
கீழ்வாணியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் இடையூறு செய்த பாஜக நிர்வாகி மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிபிஎம் அந்தியூர் தாலுக்கா செயலாளர் ஆர்.முருகேசன் அளித்த மனு விவரம்:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் எம்.என்.காளியண்ணன் 28ம் ஆண்டு நினைவு தினப் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சி கடந்த மாதம் 18ம் தேதி கீழ்வாணி சந்தை அருகில் நடைபெற்றது. தாலுக்கா செயலாளர் ஆர்.முருகேசன் தலைமையில், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி கடந்த 27 ஆண்டுகளாக இதே இடத்தில் எவ்வித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்தாண்டும் முறைப்படி ஆப்பக்கூடல் காவல்நிலையத்தில் அனுமதி பெற்று காவல்துறையினர் பாதுகாப்புடன் நடைபெற்றது. முன்னதாக கலைநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் தோழர்கள் நாற்காலியில் அமர்ந்தும், அப்பகுதிவாசிகள் ஆங்காங்கே இருந்தவாறு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது பொதுக்கூட்ட திடலுக்கு இருசக்கர வாகனத்தில் பிஜேபி என்று எழுதப்பட்டு தாமரை சின்னம் பதித்த இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் வந்தார்.
அந்த நபர் எங்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி அமர்ந்திருந்த நாற்காலி அருகில் அவர் மேலே இடிப்பது போல வேகமாக வந்து நிறுத்தினார். அதற்கு எங்கள் கட்சியின் நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்தி எங்கள் அரசியல் கருத்துகளை மக்களுக்கு தெரிவிக்கிறோம், நீங்களும் பொதுக்கூட்டம் போட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்றனர். அதனை ஏற்காத அந்த நபர் ஏன்டா கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்து, பிரதமரை விமர்சித்து பேசினால் உங்களை கொன்று விடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்தார். தகராறு செய்யாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அதனைக் கேட்காமல் தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு சீர்குழையும் நிலையை உருவாக்கினார். காவல்துறையினரிடமும் வாக்குவாதம் செய்தார். மேலும் இடத்தை விட்டு போகாமல் வெளியூர் ஆட்களுக்கு போன் செய்து வரவழைத்து அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயன்றார். ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டார். இதுகுறித்து விசாரித்ததில் மேற்படி நபர் கீழ்வாணி அருகில் உள்ள போகநாயக்கனூரைச் சேர்ந்த சமையல்கார சின்னு (எ) சின்னச்சாமி என்று எங்களுக்கு தெரியவந்தது.
இவ்வாறு இந்திய அரசியல் சாசணம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமையின்படி காவல்துறை அனுமதியுடன் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த சிபஐஎம் கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்வில் வந்து சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், சட்டம் - ஒழுங்குக்கு சீர்குழைவை ஏற்படுத்தும் வகையிலும், பொது இடத்தில் ஒரு கலவரச்சூழலை உருவாக்கி எங்களை தகாத வார்த்தைகளில் பேசி கொலைமிரட்டல் விடுத்த மேற்படி சமையல்கார சின்னு (எ) சின்னச்சாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மறுநாளே ஆப்பக்கூடல் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தோம்.
ஆனால் எங்கள் புகார் மனு மீது நாளது தேதி வரை ஆப்பக்கூடல் காவல்நிலைய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மேற்படி சின்னு (எ) சின்னச்சாமி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அப்போது, மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிச்சாமி, ஆர்.கோமதி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் மற்றும் அந்தியூர் தாலுகா கமிட்டி உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.