ஈரோட்டில் 130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு
ஈரோட்டில் 130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கட்கிழமை (இன்று) நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் பங்கேற்றனர்.;
சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து, சீர்வரிசை பொருட்களை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் வழங்கினர்.
ஈரோட்டில் 130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கட்கிழமை (இன்று) நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் பங்கேற்றனர்.
ஈரோடு சங்கு நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். விழாவில், 130 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் சுமார் 1,500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த 130 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தேசிய ஊட்டச்சத்து மாத விழாவிற்காக மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் என்ற கருத்தை மையமாகக் கொண்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 130 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐவகை உணவுகளும் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், வளையல், பேரிட்சை, பழவகைகள் மற்றும் 5 வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் பயன்பெறும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் சுகாதாரத் துறையின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மகப்பேறு கால ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
இதனை கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு மற்றும் கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி தாய்மார்கள் மிகுந்த கவனமுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பூங்கோதை, மாநகராட்சி 3-ம் மண்டல குழுத் தலைவர் சசிகுமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.