பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி நாள் விழா

Erode news- ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கல்லூரி நாள் விழா அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் இன்று (12ம் தேதி) கொண்டாடப்பட்டது.

Update: 2024-09-12 10:45 GMT

Erode news- அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தால் நடத்தப்பட்ட தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்கள் அமைச்சர் முத்துசாமியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

Erode news, Erode news today- பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கல்லூரி நாள் விழா அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் இன்று (12ம் தேதி) கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கல்லூரி நாள் விழா வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் இன்று (12ம் தேதி) வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது,

ஈரோடு மாவட்டத்தில் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட இராமலிங்கம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அதன் சார்பு அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்காகவே பிரத்யேகமாக எற்படுத்தப்பட்ட இம்மருத்துவக் கல்லூரியானது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், இங்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக புதிதாக கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் இதர பணிகளுக்காக மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23 உயர் சிறப்பு மருத்துவத் துறைகள், 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி, மருந்தகம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது.


கல்லூரி தொடங்கும் பொழுது, 60 மாணவர் சேர்க்கையுடன் இருந்த இக்கல்லூரியில், தற்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க 150 மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அரசு ஒதுக்கீட்டில் 911 மாணவ, மாணவியர்களும், சாலை போக்குவரத்து நிர்வாக ஒதுக்கீட்டில் 539 மாணவ, மாணவிகளும் படிப்பை முடித்து பட்டம் பெற்றுச் சென்றுள்ளனர்.

2021-ம் கல்வியாண்டில் 3 வகையான முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் இக்கல்லூரில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 154 மருத்துவர்களும், 145 செவிலியர்களும், 78 மருத்துவம் சார்ந்த பணியாளர்களும், 111 மருத்துவம் சாரா பணியாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று கால கட்டத்தில் தமிழ்நாடு அரசின் முழு முயற்சியால் ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்க நிர்வாகத்தால் 45 நாட்களில் 400 படுக்கைகள் கொண்டு புதிய மருத்துவமனை கட்டிடம் மற்றும் தமிழக அரசால் தற்போது ரூ.34 கோடி மதிப்பிலான தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவமனைக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தொடர்ந்து, ஈரோடு ரோட்டரி சங்கத்தின் சார்பில் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தால் நடத்தப்பட்ட தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 24 மாணவ, மாணவியர்களுக்கும், முத்தமிழறிஞர் தமிழ் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவியர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், வழங்கினார்.


மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 370 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், 110 மாணவ, மாணவியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் 42 மாணவ, மாணவியர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர்  (மு.கூ.பொ) மரு.செ.செந்தில்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் (பொ) (பேராசிரியர் பொது அறுவை சிகிச்சைத் துறை) மரு.செந்தில் செங்கோடன், துணை முதல்வர் மரு.ரா.து.புவிதா, ஈரோடு ரோட்டரி சங்க செயலாளர் சகாதேவன், ஆளுநர் (ரோட்டரி சங்கம்) சுரேஷ் உட்பட கல்லூரி மாணவ, மாணவியர்கள் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News