கோபியில் மானிய உதவியுடன் தொடங்கிய தொழில் நிறுவனங்களில் ஆட்சியர் ஆய்வு..!

ஈரோடு மாவட்டம் கோபியில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில் தொடங்கியுள்ள நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-21 04:00 GMT

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அரியப்பம்பாளையம், சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன எஸ்.பி.சிறுதானிய உணவகத்தில் மகளிர் குழுவினரின் தயாரிப்புகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு‌ ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில் தொடங்கியுள்ள நிறுவனங்களை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக தமிழக அரசின் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர கொள்கை 2021ன் கீழ் சிறப்பு தொழிலுக்கான முதலீட்டு மானியமாக ரூ.43 லட்சம் பெற்ற கொளப்பலூர் பிரிஸ்டைன் நீடில் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தை ஆய்வு செய்தார்.

இந்நிறுவனம் மருத்துவத் துறைக்கு தேவையான டிஸ்போசபிள் சிரிஞ்ச் மற்றும் ஊசி தயாரிக்கும் தொழிலை விரிவுபடுத்த வங்கிக்கடன் மூலம் புதிய இயந்திரங்களை நிறுவுவதற்கு தமிழக அரசின் சிறப்பு முதலீட்டு மானியம் 25 சதவீதம் வழங்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சிறப்புத் திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்" கீழ் செந்தில்குமார், முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான ரூ.25 லட்சம் முதலீட்டில் ரூ.6.12 லட்சம் மானியத்துடன் கனரா வங்கி கிளை வங்கி கடனுதவியுடன் தொடங்கப்பட்ட ஆட்டோ மொபைல் சர்வீஸ் சென்டர் நிறுவனத்தையும் பார்வையிட்டார்.

மேலும், தமிழக அரசின் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த செந்தில் ஒன்பவர் ரூ.3.75 லட்சம் திட்ட முதலீட்டில் ரூ.1.23 லட்சம் மானியத்துடன் வாங்கப்பட்ட மூன்று சக்கர வாகனதையும் மற்றும் சேகர் என்பவர் ரூ.11.97 லட்சம் திட்ட முதலீட்டில் ரூ.3.49 மானியத்துடன் வாங்கப்பட்ட வாடகை வாகனத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தாட்கோ நிறுவனம் மூலமாக முதலமைச்சர் எழுச்சி திட்டத்தின் கீழ் சுற்றுலா வாகனம் பெற்ற பயனாளி தங்கராசு மற்றும் பயணியர் ஆட்டோ பெற்ற பயனாளி மகேஸ்வரன் ஆகிய 2 பயனாளிகளிடம் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தில் தங்கராசு என்பவருக்கு சுற்றுலா வாகனம் வாங்குவதற்கு மானியமாக ரூ.2,29,159ம் (மொத்த மதிப்பீடு ரூ.6,54,740) மகேஸ்வரன் என்பவருக்கு பயணியர் ஆட்டோ வாங்குவதற்கு மானியமாக ரூ.1,17,522ம் (மொத்த மதிப்பீடு 3,35,777) வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் சத்தியமங்கலம், பவானி, சென்னிமலை, தாளவாடி மற்றும் பவானிசாகர் ஆகிய வட்டாரங்களின் உற்பத்தியாளர் குழுவில் உள்ள 1020 உறுப்பினர்களை பங்குதாரர்களாக கொண்டு கடந்த 13.04.2022ல் சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் இருந்து ரூ.30 லட்சம் மானிய நிதியின் மூலம் சிறுதானிய உணவகம், மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி நிலையம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடி கொள்முதல் செய்தல், மாட்டுத்தீவன விற்பனை, விதை மற்றும் உரங்கள் விற்பனை ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், உற்பத்தியாளர் குழுவில் உள்ள விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதன் மூலம் நல்ல இலாபம் ஈட்டி வருகின்றனர். 2023-24 நிதி ஆண்டில் ரூ.83.79 லட்சம் நிதி சுழற்சி செய்து ரூ.2.45 லட்சம் லாபமாக பெற்றுள்ளது. 

இதன் மூலம் நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் லாபகரமானதாகவும், தரமான சேவையையும் பெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு இந்நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்ட எஸ்.பி.சிறுதானிய உணவகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாவட்ட எஸ்.பி.சிறுதானிய உணவகத்தின் வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் வருங்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், உணவகத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்ட 6 மாதத்தில் ரூ.22.60 லட்சம் வருமானம் பெற்றுள்ளது. இந்த சிறுதானிய உணவகத்தை மேலும் கிளைகள் உருவாக்கப்பட்டு சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களும் பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட மேலாளர் அர்ஜுன் (தாட்கோ), பொது மேலாளர் திருமுருகன் (மாவட்ட தொழில் மையம்), மாவட்ட செயல் அலுவலர் சதீஷ்குமார் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்), செயல் அலுவலர் காமராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தார்.

Tags:    

Similar News