பவானி அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பவானி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-09-18 11:15 GMT

பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பவானி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (18ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.

இந்த திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, மக்களின் சேவைகள், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


அந்த வகையில், இன்று (18ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பவானி வட்டத்திற்கு உட்பட்ட பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டார். 

தொடர்ந்து, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.35.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, குருப்பநாயக்கன்பாளையம் நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு, அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள சர்க்கரை, கோதுமை, அரிசி, துவரம்பருப்பு உள்ளிட்ட நியாயவிலை பொருட்களின் இருப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் பதிவேடு மற்றும் பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்றும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, அதேப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, குருப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, அதேப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அவர்களின் எடை, உயரம் ஆகியவற்றினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக் குட்டை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, பெரியபுலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் விபரம் ஆகியவவை குறித்து கேட்டறிந்தார். பெரியபுலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பெரியபுலியூர் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், சலங்கபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தினையும், சலங்கபாளையம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளதையும், சினிமா கொட்டாய்காரர் வீதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும், மேலும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 175 மீட்டர் நீளத்திற்கு வார்டு எண். 11 மாகாளியம்மன் கோவில் முதல் மாரியம்மன் கோவில் வரை வடிகால் மற்றும் கல்வெர்ட் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வுகளின்போது, கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், பவானி வருவாய் வட்டாட்சியர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், வரதராஜன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News