ஈரோட்டில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு இலவச பயிற்சி..!
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.;
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (பைல் படம்).
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (டிப்ளோமா/ ஐடிஐ) 2024 பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வேளாண்மைத்துறை, நில அளவைகள் பதிவேடு துறை போன்ற பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை வரை தொழில் அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், தொழில்நுட்பவியலாளர், அளவர் உள்ளிட்ட 861 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டயம்/தொழிற்பயிற்சி (Diploma/ITI) நிலை முடித்திருக்க வேண்டும். தாள்-1-ற்கான தேர்வு 09.11.2024 அன்றும், தாள்-2-ற்கான தேர்வு 11.11.2024 முதல் 14.11.2024 வரை நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2024 ஆகும். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு, இலவச வைஃபை வசதி. அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள் (ஸ்பாட் டெஸ்ட்), வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2,4, டிஎன்யூஎஸ்ஆர்பி, டெட் ஆகிய பயிற்சி வகுப்புகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/5tTFr7CqZFNuwZ596 என்ற லிங்கை கிளிக் செய்து தங்களது விவரங்களை பூர்த்தி செய்து தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஆதார்எண், புகைப்படம் இரண்டு, ஆகியவற்றுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு (ஐடிஐ அருகில், சென்னிமலை வழி) நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலைப்பேசியினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஆண்/பெண் இருபாலர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.