ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டிடங்கள், மருத்துவ உபகரண மையங்களை திறந்து வைக்கும் முதல்வர்
ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரண மையங்களை தமிழ்நாடு முதல்வர் 13ம் தேதி புதன்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.;
ஈரோடு மாவட்டத்தில் ரூ.79 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரண மையங்களை தமிழ்நாடு முதல்வர் 13ம் தேதி (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வரும் 13ம் தேதி (புதன்கிழமை) நடக்க உள்ள அரசு விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.67.03 கோடி செலவில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதேபோல், ரூ.6.89 கோடியில் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு மையம், பவானி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டி டம், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.2.24 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சி.டி.ஸ்கேன் மையத்தை திறந்த வைக்க உள்ளார்.
இதேபோல், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசேமூர், கருங்கல்பாளையம் ஆகிய பகுதியில் தலா ரூ.22 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற பொது சுகாதார ஆய்வகங்கள், கம்புளியம்பட்டியில் கட்டப்பட்டுள்ள ரூ.30 லட்சம் மதிப்பிலான துணை சுகாதார நிலையம், அம்மாபேட்டையில் ரூ.50 லட் சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட மொத்தம் ரூ.79 கோடி மதிப்பிலான கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேலும், ரூ.5 கோடி மதிப்பிலான அந்தியூர் மருத்துவமனையில் கூடுதல் - மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.