பவானியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலிக்கொடி பறித்த 2 வாலிபர்கள் கைது
ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் தங்க தாலிக்கொடியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட இருவரை படத்தில் காணலாம்.
பவானியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் தங்க தாலிக்கொடியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ராணா நகரை சேர்ந்தவர் சின்னய்யன். இவரது மனைவி வேதாம்பாள் (65). ஓய்வு பெற்ற பள்ளி கல்வித்துறை ஊழியர். இவர், கடந்த 3ம் தேதி மாலை கவுண்டர் நகர் அருகே உள்ள கடையில் பால் வாங்கிக் கொண்டு பவானி - மேட்டூர் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள பழக்கடை சந்து வழியாக சென்ற போது பின்னால் வந்த மர்ம நபர்கள் வேதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த வேதாம்பாள் கூக்குரல் எழுப்பினார். அப்பகுதியினர், வந்து தேடிப் பார்க்கையில் மர்ம நபர் மேட்டூர் சாலை வழியாக தப்பி ஓடியது தெரிய வந்தது. இதுகுறித்து வேதாம்பாள் பவானி போலீசில் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி கடைவீதி, சவுண்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நிஜார் அலி (வயது 29), அதே பகுதியை சேர்ந்த அமரன் (வயது 23) ஆகியோரை பவானி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 7 பவுன் தங்க தாலிக்கொடியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.