மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஈரோடு காங்கிரஸ் வலியுறுத்தல்
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பதவி விலக வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாட்ஷா வலியுறுத்தி உள்ளார்.
ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 54வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாநகர மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமையில் ஜாபர் சாதிக், ராஜேஷ் ராஜப்பா, மாரியப்பன், கோட்டை விஜயபாஸ்கர், அர்ஷத், மகிளா காங்கிரஸ் தலைவர் நசியனூர் ஞானதீபம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவரும், தென்னக ரயில்வே முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினருமான கே.என்.பாட்ஷா கூறியதாவது:-
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு ரயில்வே துறை பெருமளவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட் நீக்கப்பட்டுள்ளது. விபத்துக்கள் அதிகரித்துள்ளன/ கடந்த ஜூன் மூன்றாம் தேதி ஒடிசாவில் மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது.
அதில் 300 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தற்பொழுது சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தை இதேபோன்று ஒரு பெரிய விபத்து நடந்துள்ளது. விசாரணைகள் கண் துடைப்பாக உள்ளன. பிரதமர் இது குறித்து வாய் திறப்பதில்லை லால் பகதூர் சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் அரியலூரில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.
அப்போது, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று ரயில்வே துணை அமைச்சராக இருந்த ஓவி அழகேசனும் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். ஆனால், பாஜக ஆட்சியில் இந்த விபத்துக்கள் குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. பழியை யார் மேல் போடலாம் என்று யோசிக்கிறார்கள். ரயில்வே பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்கவும் ரயில்வே துறையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் அவர்கள் முன் வரவில்லை, மாறாக ரயில்வேயை தனியார் மையமாக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த தொடர் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.