கோபி காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நர்ஸ் மீது வழக்குப்பதிவு
கோபி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தனியார் மருத்துவமனை நர்ஸ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்;
கோபி காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற செவிலியர் ஜெயசுதா.
கோபி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற தனியார் மருத்துவமனை நர்ஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (50). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ஜெயசுதா (24) உட்பட 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஜெயசுதா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் வாட்ஸ் அப் குழுவில் ஜெயசுதா இணைந்துள்ளார்.
அந்த குழுவில் கோபி அருகே உள்ள வாணிப்புத்தூரை சேர்ந்த செல்லப்பன் மகன் வசந்த் என்பவரும் இருந்துள்ளார்.ஒரே குழுவில் இருந்ததால், அடிக்கடி இருவரும் பேசி வந்தனர். வசந்த், நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருந்துள்ளார். டிப்ளமோ இன் பெட்ரோ கெமிக்கல் படித்துள்ள வசந்த் தந்தையுடன் வாழைத்தார் வியாபாரமும், கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராகவும் வேலை செய்து வருகிறார். ஒரே குழுவில் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெயசுதாவை, வசந்த் திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகியதாக தெரிகிறது. இதனால், இருவரும் பல்வேறு இடங்களுக்கு காதலர்களாக சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு, வசந்த், ஜெயசுதாவை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. வசந்தை, ஜெயசுதா தொடர்பு கொண்ட போது, அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயசுதா, இதுகுறித்து சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், வழக்குப்பதிந்து 10 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஜெயசுதா, கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வசந்த் மீது புகார் அளித்தார். அப்போது போலீசார் ஏற்கெனவே சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் வசந்த் மீது வழக்கு இருப்பதால், மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும், சத்திய மங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக விசாரிக்குமாறு அறிவுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய ஜெயசுதா, அருகே இருந்த கோபி காவல் நிலையம் முன்பு சென்றதும் தனது கைப்பயில் கேனில் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது காவல் நிலைய வளாகத் தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஜெயசுதாவிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிக்க முயன்றனர்.
ஆனால், அதற்குள் ஒரு லிட்டர் பெட்ரோலையும் தலை மீது ஊற்றிய ஜெயசுதா, தீப்பற்ற வைக்க முயன்றார். இதற்கிடையே சப்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போலீசார் உடனடியாக, ஜெயசுதா மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற ஜெயசுதா மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.