அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்: 7 பேர் காயம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் 30 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர்.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் 30 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). இதேபோல், சவுண்டப்பூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 56). இவர்களுடைய நண்பர்கள் மூங்கில்பட்டியை சேர்ந்த பெருமாள்சாமி, சரவணன், சேகர், முத்துக்குமார், குமார் ஆகிய 7 பேரும் பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரை - கர்ககேண்டி சாலையில் காரில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
காரை முத்துக்குமார் ஓட்டினார். அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பாதையில் வேலாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக காரை முத்துக்குமார் திருப்பி உள்ளார். இதில், கார் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த 7 பேரும் காயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள், காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மணிகண்டன், கதிர்வேல் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.