ஈரோடு மாவட்டத்தில் செயற்கை முறை கருவூட்டல் மூலம் கிடேரி கன்று பெற அழைப்பு

செயற்கை முறை கருவூட்டல் மேற்கொண்டு கிடேரி கன்று பெறலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்;

Update: 2023-09-19 14:00 GMT

செயற்கை முறை கருவூட்டலில் கிடேரி கன்று பெற அழைப்பு  (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் செயற்கை முறை கருவூட்டல் மேற்கொண்டு கிடேரி கன்று பெறலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் (என்ஏடிபி) 2019-20-இன் கீழ் 75 சதவீதம் மானிய விலையில் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து குச்சிகள் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 46 எண்ணிக்கையிலான கால்நடை மருந்தகங்கள் மூலம் பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் மேற்கொள்ளும் பொழுது 85% கிடேரி கன்றுகள் பிறக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இயலும். மேலும் இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு செயற்கை முறை கருவூட்டலுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.160 (25% கால்நடை வளர்ப்போர் பங்களிப்பு தொகையை செலுத்தி கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்து கொள்ளலாம்.

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி தங்களது பசுக்களுக்கு பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகள் கொண்டு செயற்கைமுறை கருவூட்டல் மேற்கொண்டு கிடேரி கன்றுகள் பெற்று பயன்பெற விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகலாம். 

கூடுதல் விவரங்களுக்கு, ஈரோடு, கால்நடை பெருக்கம் (ம) தீவன அபிவிருத்தி, துணை இயக்குநர் அலுவலகத்தை 0424-2260513 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News