சிஏஜி அறிக்கை வழக்கமான ஒன்று தான்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கோபி எம்எல்ஏ செங்கோட்டையன் தனது பதவிக் காலத்தில் கல்வித் துறையில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சிஏஜி அறிக்கை வந்துள்ளதை நிராகரித்தார்.;
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட இலவச நீர்மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட இலவச நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, அளுக்குளி பஞ்சாயத்துக்கு குப்பைகளை அகற்றுவதற்கான புதிய வாகனத்தை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, வழக்கமாக சிஏஜி அறிக்கை சில குறைபாடுகளை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தணிக்கை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்வது வாடிக்கையான ஒன்று. அதிமுக ஆட்சியில் கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டது.
கொரோனா மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அதிமுக ஆட்சிக் காலத்தில் பலர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றினர். அதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. எனவே அதிமுக ஆட்சியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது என்ற தற்போதைய கல்வி அமைச்சரின் நிலைபாடு தவறானது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக சிறந்த நிர்வாகத்தை வழங்கியது. எனவே, இந்த விவகாரத்திலும் அமைச்சரின் நிலைபாடு தவறானது. ஏற்கனவே புலிகள் சரணாலயம் சத்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தாளவாடி மலைப்பகுதியில் வாகன போக்குவரத்து இரவு ஒன்பது மணிக்கு மேல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் கோபி பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டால் மக்களுக்கு கஷ்டம் ஏற்படும். எனவே இதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். பேட்டியின் போது, மகளிர் அணி செயலாளர் சத்யபாமா, மாவட்ட பொருளாளர் கே.கே.கந்தவேல்முருகன், கோபி நகர செயலாளர் பிரியோனி கணேஷ், கோபி ஊராட்சி ஒன்றிய தலைவர் மவுலீஸ்வரன், கோபி தொகுதி ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிநாதன், தம்பி (எ) சுப்பிரமணியம், வக்கீல் வேலுமணி, மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரன், கோபி இளைஞர் அணி செயலாளர் ஜி.எம்.விஸ்வநாதன், கோபி நகர பேரவை செயலாளர் விஜயகுமார், கோபி நகர மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவி இந்துமதி, ஊராட்சி செயலாளர் பாண்டு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வேலுசாமி மற்றும் அண்ணா திமுக அனைத்து சார் பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.