4 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை: மகிழ்ச்சியில் மலைக்கிராம மக்கள்
4 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தியூர் அருகே உள்ள காக்காயனூர் மலைக் கிராமத்துக்கு அரசுப் பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தியூர் அருகே உள்ள காக்காயனூர் மலைக் கிராமத்துக்கு அரசுப் பேருந்து சேவை இன்று (20ம் தேதி) மீண்டும் தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சங்கராபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காக்காயனூர் மலைக் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கும் அவசர தேவைகளுக்கும் பள்ளி கல்லூரி செல்ல பேருந்து வசதியின்றி தவித்து வந்தனர். இந்நிலையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் மலைக்கிராம மக்கள் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கிட கோரிக்கை மனு வழங்கியிருந்தனர்.
அந்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், காக்காயனூர் மலைக்கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் இன்று (20ம் தேதி) தொடங்கி வைத்தார். இதனால், மலைக்கிராம மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் தெரிவிக்கையில், கொரோனா பரவல் காலத்தில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்ட போது, இந்தப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால், நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக அவசர மற்றும் அன்றாட தேவைகளுக்கும் பள்ளி கல்லூரி சென்றிடவும் பேருந்து வசதியின்றி மிகவும் தவித்து வந்தோம்.
இதுகுறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு வழங்கியிருந்த நிலையில், எங்களுக்கு பேருந்து வசதியை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் எம்எல்ஏக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
இந்நிகழ்ச்சியில், அந்தியூர் போக்குவரத்து கிளை மேலாளர் ரமேஷ், அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி (சங்கரா பாளையம்), சரவணன் (மைக்கேல் பாளையம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.