ஈரோடு மாவட்டத்தில் 983 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 983 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கி வைக்கப்பட உள்ளது.

Update: 2023-08-25 01:15 GMT

காலை உணவுத் திட்டம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 983 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கி வைக்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவுத் வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்கள், மலைக் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இதன்படி,  இன்று (25ம் தேதி) வெள்ளிக்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது முதற்கட்டமாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் மலைக்கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள் என 96 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் 8 ஆயிரத்து 903 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்டு இன்று (25ம் தேதி) முதல் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி மாவட்டத்தில் 983 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 42 ஆயிரத்து 848 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர். 

இன்று 2ம் கட்டமாக மாவட்டத்தில் தொடங்கும் இத்திட்டத்தை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான முத்துசாமி வெள்ளோடு அரசு தொடக்கப்பள்ளியில் காலை 8 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டமானது 1079 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 51 ஆயிரத்து 751 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என்றும், இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டம் தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News