வாய்க்காலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு: ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களின் தொகுப்பை இங்கு காண்போம்.;
ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் (பைல் படம்).
வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி:-
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு, காமதேனு நகரை சேர்ந்தவர் அறிவழகன் (34), வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருக்கு தர்ஷன் (13), லாவண்யா (9) என 2 குழந்தைகள் இருந்தனர். இதில், தர்ஷன் 7ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த தர்ஷன் தன்னுடன் படிக்கும் கவுதம் என்ற மாணவருடன் சேர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வாய்க்கால் படிக்கட்டில் அமர்ந்திருந்த தர்ஷன் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்தான். நீச்சல் தெரியாததால், தண்ணீரில் சிறுவன் அடித்து செல்லப்பட்டான். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்துக்கு சென்று தர்ஷனின் சடலத்தை மீட்டனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி:-
ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ரோஷன்பிஜி (19). ஈரோடு ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரி பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை ஈரோடு சென்னிமலை ரோடு பழைய கூட்ஸ் செட் அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ் சக்கரம் தலையில் ஏறி இறங்கியது. இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரோஷன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசா ரணை செய்து வருகின்றனர்.
எலிபேஸ்ட் தின்ற பெண் உயிரிழப்பு:-
ஈரோடு மாமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி லட்சுமி (46). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில், கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்த லட்சுமிக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மன முடைந்து வீட்டில் இருந்த எலிபேஸ்ட் தின்று ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.