ஈரோட்டில் நடந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேர் பலன்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம், ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 5,500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் தொடங்கியது. நேற்று நடந்த முகாமில் 835 முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.